Sunday, May 14, 2006

அம்மா

சுதந்திரப் பறவையாக
வானில் பறக்க எண்ணி
இறகை விரித்தேன்!
பறக்கையில்தான் தெரிந்தது
அம்மா...!
நீதான் வானமென்று!

இப்போ நான்
வெறுமை பூத்த வெட்ட வெளியில்
தனியாக...!

தீபா - நவம்பர்-1996

Saturday, May 13, 2006

பால்வினை

- தீபா -

சில பெண்கள் ஆடம்பர வாழ்க்கை ஒன்றுக்காக தமது உடலை அறியாத தெரியாத ஒருவனிடம் அனுபவிக்கக் கொடுப்பதைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கிறது. இதைச் சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. அந்த உணர்வுகள் எதுவும் இல்லாது வெறும் ஜடங்களாய் பணத்துக்காக உடலைக் கொடுப்பது எத்துணை கேவலமானது.

பணம் தேவையென்றால் எத்தனையோ வேலைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன. அதில் கிடைக்கும் பணம் சொற்பமாயினும் அது புனிதமானது. எமது நியமான நேர்மையான உழைப்பிற்கான ஊதியம் அது.

அதை விடுத்து ஐரோப்பிய அமெரிக்க பள்ளி மாணவிகளும் பல்கலைக்கழக மாணவிகளும் ஓரளவு பணமிருந்தும் ஆடம்பரம் ஒன்றுக்காக சைப்பிரஸ் போன்ற பணக்கார நாடுகளுக்கு உல்லாசப் பயணிகளாகச் சென்று உடலை விற்று வருவது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம்.

இவர்களின் இந்த செயற்பாடு வறிய நாடுகளான சீனா தாய்லாந்து ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு உறுதுணையாக இருக்கின்றன.

சில பெண்கள் பால்வினையை தமது விருப்போடு ஒரு தொழிலாகச் செய்வதால், கட்டாயப் பால்வினைக்கு வற்புறுத்தப் படும் பலபெண்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது.

இந்த விடயத்தில் பெண்கள் எல்லோருமாக ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். ஆண்கள் தமது இச்சைகளுக்காகப் பெண்களை எப்படிப் பயன் படுத்துகிறார்களென்பதை உணர்ந்து புரிந்து அதை எதிர்க்கத் துணிய வேண்டும். ஒட்டு மொத்தமான பெண்கள் இனமும் ஓங்கிக் குரல் கொடுக்கும் போதுதான் இது இல்லாது ஒழிக்கப் படுவதற்கு ஒரு வழி கிடைக்கும்.

பெண்களைப் பால்வினைக்குப் பயன் படுத்தும் இந்த செயற்பாடு கூட ஒரு திட்டமிட்ட பெண்கள் மீதான சதிதான்.

முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களுக்கும், வணிகர்களுக்கும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானிடர்க்கும் போகும் இடமெல்லாம் பாலியல் தேவைப் பட்டுள்ளது. அவர்கள் மனைவியர் வீடுகளுக்குள் அடைந்து கிடக்க இந்த அவாப் பிடித்த ஆண்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வேற்றுப் பெண்களை அனுபவிக்கத் தயாராயிருந்தார்கள். அந்தப் பெண்கள் சிறுமிகளாகக் கன்னி கழியாதவர்களாக இருப்பதையே இவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

இவர்களது இந்த வஞ்சகத்தனமான அற்ப ஆசைகளுக்கு ஏழைப் பெண்கள்தான் பலியானார்கள். ஆரம்பகாலத்தில் யப்பானில் தாய் தந்தையரை இழந்த பெண் குழந்தைகளும், தாய் தந்தையர் ஏழைகளாக இருந்த குடும்பத்துப் பெண்குழந்தைகளும் குறிப்பிட்ட சில குடும்பங்களினால் வீட்டு வேலை செய்வதற்கெனச் சொல்லி அடிமைகளாக வாங்கப் பட்டார்கள்.
அவர்கள் உணவு உடை கொடுத்து வளர்க்கப் பட்டு இந்த இச்சை கொண்ட ஆண்களுக்காகத் தயார் படுத்தப் பட்டார்கள். அந்தப் பிள்ளைகளை வாங்கும் போது அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென்பதில் இந்தக் குடும்பங்கள் மிகவும் கவனம் காட்டின. அழகிய பெண் குழந்தைகள்தான் நல்ல விலைக்குப் போனார்கள்.

இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது.

இந்தப் பெண்களை தாம் வளர்ப்பதுக்கும் வாங்குவதற்கும் செலவழித்த பணம் என்று சொல்லி அந்த வளர்ப்புப் பெற்றோர் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குத் தீரும் வரை இந்தப் பெண்கள் இந்தத் தொழிலைச் செய்து பணத்தை வளர்ப்புப் பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் விலைமாதர்கள் உருவானார்கள் என்றொரு ஆதார பூர்வமான கதை உள்ளது. இவர்கள் Gysha(ஹைஷா) என அழைக்கப் பட்டார்களாம்.

இது இன்றைய நவீன உலகத்திலும் தொடர்வது மிகவும் மனவருத்தமான ஒரு விடயமே.

இன்று பெண்கள் அவர்கள் கணவன்மார்களாலேயே பால்வினைத் தொழிலுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள்.

உதாரணமாக தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறிய குடும்பத்துப் பெண்கள் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்காக அவர்கள் கணவன்மார்களாலேயே பால்வினைத் தொழிலுக்கும் இரவு நடனத்துக்கும் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.

1992 இலிருந்தே பாக்கிஸ்தான் எல்லையில் -பெண்கள் விபச்சார விடுதிச் சொந்தக்காரர்களுக்கும் தரகர்களுக்கும் விற்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. இங்கு 12 வயதுப் பெண்பிள்ளைகள் நல்ல விலை போகிறார்களாம். இவர்கள் பெரிதும் விரும்பி வாங்கப் படுகிறார்கள்.

இப்படியே உலகின் பல மூலைகளிலும் பெண்களும் பெண்குழந்தைகளும் வதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்காவிடில் இதற்கு விமோசனம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பெண்களே ஒன்று திரளுங்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிலும் ஆண்களாலும் சமூகத்தாலும் ஒவ்வொரு விதமாகப் பயன் படுத்தப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எதையும் உங்கள் பிரச்சனையில்லை என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள். நாளை நீங்களோ அல்லது உங்கள் மகளோ இதே பிரச்சனையில் வதைபடலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.


தீபா செல்வகுமாரன்
யேர்மனி

பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002

Monday, March 20, 2006

test

test